டிராக்டர் கவிழ்ந்து பெண் பலி: 10 பேர் படுகாயம்
- டிராக்டர் கவிழ்ந்து பெண் தொழிலாளி பலியானார்.
- விபத்து குறித்து சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
தென்காசி மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ளகீழூர் ராமசாமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் ஒரு டிராக்டரில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தோட்டத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பணி முடிந்து அனைவரையும் டிராக்டரில் ஏற்றி ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஒரு வளைவில் திரும்பும் போது டிராக்டர் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் தேவிபட்டினம் கீழூர் ராமசாமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி சுந்தரம்மாள் (வயது 65) டிராக்டருக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டிராக்டர் டிரைவர் விருதுநகர் எரிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (34) படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். டிராக்டரில் பயணம் செய்த தேவிபட்டினம் கீழூர் ராமசாமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மரிய பாக்கியம் (75), மரியசெல்வம் (56), ராஜலட்சுமி (51), கடல் மாதா (42), கோமதி (63), தங்கமலை (50), கிறிஸ்து மேரி (49), செல்வம் (52), ஜெயமேரி (47), முத்துமாரி (50) ஆகிய 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் அனைவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.