உள்ளூர் செய்திகள்

குளம் போன்று காட்சி அளிக்கும் சாலைகள்

Published On 2022-09-05 08:32 GMT   |   Update On 2022-09-05 08:32 GMT
  • அருப்புக்கோட்டை அருகே பெய்த மழையால் சாலைகள் குளம் போன்று காட்சி அளிக்கின்றன.
  • பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்யும் அவல நிலை உள்ளது.

அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் முத்தரையர் சிலை அருகே மழைக்காலங்களில் சாலையானது சேறும், சகதியுமாக, மிகுந்த பள்ளமாக குளம் போல் காட்சியளிக்கிறது.

அருப்புக்கோட்டையில் இருந்து செம்பட்டி வழியாக புலியூரான் தென்பாலை கிராமத்திற்கு பள்ளி பஸ்கள் மாணவர்களை அழைத்து வந்து செல்கின்றன.

அந்தப் பகுதியில் தனியார் மில்கள் இயங்கி வருகின்றன. மில் வாகனங்களும் இந்த சாலை வழியாக செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

குளம் போல் காட்சி அளிக்கும் பாதையில் அரசு பஸ்களும், தனியார் பள்ளி வாகனங்களும் மாணவர்களை ஏற்றி கொண்டு சென்று வருகின்றன. அதில் செல்லும் மாணவர்கள் ஆபத்தான முறையில் இந்த சாலையில் பயணம் செய்கின்றனர்.இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று செம்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News