லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி நிற்கும் காட்சி.
- லாரி மோதி பா.ஜ.க. பிரமுகர் பலியானார்.
- மதுரை நோக்கி காரில் சென்றபோது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் கதிரேசப்பாண்டியன். இவர் பா.ஜ.க.மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார். நேற்று கதிரேசபாண்டியனும், அவரது மனைவியும் மதுரை நோக்கி காரில் சென்றனர். காரை கதிரேசபாண்டியன் ஓட்டி சென்றார். அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் சென்றபோது தேனியில் இருந்து ராஜ பாளையம் நோக்கி வந்த லாரி மீது, கார் நேருக்கு நேர் மோதியது.
இதில் கதிரேசப் பாண்டியன், அவரது மனைவி ராமலட்சுமி இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் கதிரேசபாண்டியன் இறந்துவிட்டார். அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.