புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.
சமூக பொருளாதார நிலையை உயர்த்த கல்வி பயன்பட வேண்டும்
- சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு கல்வி பயன்பட வேண்டும்.
- புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.
விருதுநகர்
விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுமைப் பெண் திட்டம் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
இந்தியாவில் 12-ம் வகுப்பு முடித்து, கல்லூரியில் சேருபவரின் எண்ணிக்கை 3-ல் 1 பங்காக உள்ளது. இதில் உயர்கல்வி பயிலும் பெண்கள் எண்ணிக்கை 25 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. ஆனால், உயர்கல்விக்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் 52 விழுக்காடு பெற்று இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது.
கல்லூரி என்பது பட்டம் பெறுவதற்கான இடம் மட்டுமல்ல. அந்த கல்வியோடு, சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயல்கள் குறித்தும் கண்காணிப்பது, அது குறித்து ஒரு தீர்க்கமான பார்வை கொண்டிருப்பது உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுப்பதுதான் கல்லூரி.
அந்த கல்வியை முறையாக பயில்வதன் மூலம் ஒரு முழுமைபெற்ற, சமூகத்தில் ஒரு பொறுப்பு மிக்க பெண்ணாக உருமாற்றம் பெற்று, உங்களை காத்துக் கொள்வதற்கும், சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும், உங்களை சார்ந்த குடும்பத்தை பாதுகாப்பதற்கும் உங்கள் கல்வி பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர்(பொ) தங்கலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சட்டம்) சிக்கந்தர் பீவி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பிரியதர்ஷினி, கல்லூரி முதல்வர் முனைவர் உஷா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.