உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் கையேட்டை வட்டாரக் கல்வி அலுவலர் மலர்கொடி வழங்கினார். அருகில் தலைமை ஆசிரியை மேரி உள்ளார்.

4 ஆயிரம் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட கையேடுகள் வழங்கல்

Update: 2022-07-03 11:55 GMT
  • ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் 4 ஆயிரம் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட கையேடுகள் வழங்கப்பட்டது.
  • எண்ணும் எழுத்தும் கையேடு வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியை மேரி தலைமையில் நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கையேடு வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியை மேரி தலைமையில் நடந்தது. ஆசிரியை ஆனந்தவல்லி வரவேற்றார்.

புத்தகங்களை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் மலர்கொடி பேசியதாவது:-

நடப்பு கல்வியா ண்டிலிருந்து எண்ணும் எழுத்தும் திட்டம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

2025-ம் கல்வியாண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 3-ம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள், பொருள் புரிந்து படிக்கவும் எழுதவும் அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது எண்ணும் எழுத்தும் திட்டத்தின் இலக்கு ஆகும்.

இதற்காக மாணவர்களுக்கு சிறப்புக் கையேடுகள் அரும்பு, மொட்டு, மலர் என 3 வகையாக தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 1-ம் வகுப்பு படிக்கும் 1272 மாணவர்களுக்கும், 2-ம் வகுப்பு படிக்கும் 1509 மாணவர்களுக்கும், 3-ம் வகுப்பு படிக்கும் 1514 மாணவர்களுக்கும் என மொத்தம் 4295 மாணவ-மாணவிகளுக்கு இந்த கையேடு வழங்க ப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் வகுப்பறையின் அமைப்பு, கற்றல் களங்கள், துணைக்கருவிகள் மூலம் குழந்தைகள் பங்கேற்றுக் கற்பதை பெற்றோர் அறியும்வகையில் வகுப்பறையைப் பெற்றோருக்கு காட்சிப்படுத்த வேண்டும்.

குழந்தைகளின் தனித்திறன்கள் வகுப்பறையில் ஊக்குவிக்கப்படுவது குறித்து விளக்கிக் கூறுவதோடு குழந்தைகளின் திறன்களைப் பெற்றோர் காணும்வகையில் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இந்த கருத்துக்களை முதன்மைப்படுத்தி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு) வகுப்பு வாரியாக பெற்றோர் கூட்டம் நடத்த தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆசிரியை ஆவுடையம்மாள் நன்றி கூறினார்.

Tags:    

Similar News