வங்கியில் விவசாயி வாங்கிய ரூ.1½ லட்சம் திருட்டு
- ஸ்ரீவில்லிபுத்தூரில் வங்கியில் விவசாயி வாங்கிய ரூ.1½ லட்சம் கடன் பணம் திருடு போனது.
- இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள குன்னூர் புதூர் ரோட்டை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 62). விவசாயியான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு வங்கியில் வேளாண் கடன் கிடைத்தது. இந்த பணத்தை எடுப்பதற்காக கருப்பசாமி நேற்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றார்.
வங்கி கொடுத்த கடன் பணத்தில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். பணத்தை மோட்டார் சைக்கிள் லாக்கரில் வைத்திருந்தார். மார்க்கெட் அருகே சென்ற போது கருப்பசாமி அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒரு நகைக்கடைக்கு சென்றார்.
அங்கு அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் லாக்கரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், பான் கார்டு, வங்கி புத்தகம் மற்றும் ஆவணங்கள் திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கருப்பசாமி கொடுத்தபுகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
கருப்பசாமி நகைக்கடையில் இருந்தபோது மர்மநபர் கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.