வேலூர் காகிதப்பட்டறையில் பாதாள சாக்கடை பணியால் போக்குவரத்து நெரிசல்
- பொதுமக்கள் கடும் அவதி
- வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட வலியுறுத்தல்
வேலூர்:
வேலூரில் ஆற்காடு சாலையில் தற்போது பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. காகிதப் பட்டறையில் சாலையின் ஒரு பகுதியில் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி குழாய்கள் பதித்து வருகின்றனர்.
பணிகள் நடக்கும் இடத்தில் இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர்.
இதன் காரணமாக காகிதப்பட்டறையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் மற்றும் கனரக வாகனங்கள் வரும் பொழுது அதிக நெரிசல் ஏற்படுகிறது.வாகனங்கள் சிக்கி திணறுகின்றன.
அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூட சாலையை கடக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணி ஆற்காடு சாலையில் சைதாப்பேட்டை முருகன் கோவில் வரை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இங்கு சுமார் ஒரு மாத காலத்திற்கு பணிகள் நடைபெற வாய்ப்புள்ளது.
தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஆற்காடு சாலையில் பஸ் மற்றும் கனகரக வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும். குறிப்பாக டவுன் பஸ் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சொந்தமான வாகனங்கள் அதிக அளவில் இந்த சாலையில் வருகின்றன. அவற்றை மாற்றுப்பாதையில் திருப்பி விட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.