உள்ளூர் செய்திகள்

பஞ்சு மூட்டைக்குள் பதுக்கி கஞ்சா கடத்தலா?

Published On 2023-02-27 10:04 GMT   |   Update On 2023-02-27 10:04 GMT
  • ஆந்திராவில் இருந்து கண்டெய்னர் லாரியில் வந்தது
  • மதுரை உரிமையாளர் முன்பு பிரித்து பரிசோதனை

வேலூர்:

வடமாநிலங்களில் இருந்து வேலூர் வழியாக கன்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர் நேற்று இரவு 9 மணியளவில் வேலூர் கொணவட்டம் பகுதியில் சென்னை-பெங்களூரு அணுகுசாலையில் திடீரென வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி, வேன், சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி, அவற்றில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்று சோதனை செய்தார்.

அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவினர் அந்த வழியாக வந்த மற்ற வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது ஒரு கன்டெய்னர் லாரியில் ஏராளமான பிளாஸ்டிக் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் இதுகுறித்து டிரைவரிடம் விசாரித்தபோது மூட்டைகளில் பஞ்சு இருப்பதாக தெரிவித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியில் இருந்த மூட்டைகளை சோதனை செய்வதற்காக ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு வைத்து வேலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் போலீசார் 2 மூட்டைகளை சோதனை செய்தனர். அந்த மூட்டைகளில் பஞ்சு இருப்பது தெரிய வந்தது. டிரைவரிடம் நடத்திய விசாரணையில், ஒரிசாவில் இருந்து பஞ்சு மூட்டைகளை சேலத்துக்கு கொண்டு செல்வதாக கூறினார்.

பின்னர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து மதுரைக்கு செல்வதாக டிரைவர் தெரிவித்தார்.மேலும் சில கேள்விகளுக்கு டிரைவர் முன்னுக்கு பின் முரண்பாடான தகவல்கள் தெரிவித்தார்.

அதனால் லாரியில் இருக்கும் அனைத்து பஞ்சு மூட்டைகளையும் பிரித்து சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது குறித்து மதுரையை சேர்ந்த லாரி உரிமையாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரது முன்னிலையில் இன்று சோதனை செய்ய ஏற்பாடு செய்தனர்.

வேலூரில் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ஆந்திராவில் இருந்து மதுரை மற்றும் தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்திய நபர்கள் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லாரியில் உள்ள பஞ்சு மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தால் தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வரும் கும்பலை கூண்டோடு கைது செய்ய வாய்ப்பு உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News