உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஏரியில் ஆண் பிணம்

Published On 2023-03-15 14:32 IST   |   Update On 2023-03-15 14:32:00 IST
  • மீன் பிடிக்கச் சென்றவர் தவறி விழுந்து இறந்தாரா?
  • போலீசார் விசாரணை

குடியாத்தம்:

வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரியாகும். இந்த ஏரி தற்போது 70 சதவீதம் நிரம்பிய நிலையில் உள்ளது. ஏராளமான மீன்கள் உள்ளன. வலைகள் வீசியும், தூண்டில்கள் மூலம் பொதுமக்கள் மீன்களைப் பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குடியாத்தம்-பேரணாம்பட்டு ரோடு நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் ஏரிக்கரையை ஒட்டியபடி ஆண் பிணம் இன்று காலையில் மிதந்து கொண்டு இருந்தது. இதனை கண்டவர்கள் உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கும், குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஏரியில் மூழ்கிய நிலையிலிருந்து ஆண் பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

குடியாத்தம் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏரியில் இருந்து மீட்கப்பட்ட சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அவர் அணிந்திருந்த ஆடைகளில் சோதனை செய்தபோது அவரிடம் இருந்து ஆதார் கார்டில் உம்ராபாத் அடுத்த கடாம்பூர் பகுதியைச் சேர்ந்த சையத்முனவர் என பெயர் இருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் உமராபாத் பகுதியில் உள்ள காவல் துறையினரை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

பிணத்தை பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் கூறுகையில்:-

நேற்று மாலை அல்லது இரவு மீன் பிடிக்க அந்த நபர் தூண்டிலுடன் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியில் அமர்ந்துள்ளார் அப்போது தவறி ஏரியில் விழுந்து இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

அங்கிருந்த தூண்டில் மற்றும் மீன் பிடிக்க தேவையான பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News