வீட்டை விட்டு ஓடிய 10-ம் வகுப்பு மாணவன் 6 மணி நேரத்தில் மீட்பு
- போலீசார் தனிப்படை அமைத்து தேடினர்
- மாணவனின் செல்போன் எண்ணை வைத்து மீட்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் இவரது மனைவி தனியார் மருத்துவமனையில் நர்சாக உள்ளார்.
மாணவன் மாயம்
இவர்களது மகன் குடியாத்தத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் வீட்டிலிருந்து சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற மாணவன் பள்ளிக்குச் செல்லவில்லை.
மாணவன் பள்ளிக்கு வராதது குறித்து வகுப்பு ஆசிரியர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தேர்வு நெருங்கி வரும் வேளையில் 10-ம் வகுப்பு மாணவர் வகுப்பிற்கு வராதது குறித்து தலைமை ஆசிரியர் அந்த மாணவனின் பெற்றோரை தொடர்பு கொண்ட போது மாணவன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டதாக கூறியுள்ளார். அப்போது தலைமை ஆசிரியர் மாணவன் பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் உடனடியாக மாணவனின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்துள்ளனர்.
எந்தவித தகவலும் கிடைக்காததால் உடனடியாக குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மாணவன் காணாமல் போன தகவல் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்டார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
வேலூர் சைபர் கிரைம் போலீசார் இணைந்து அந்த மாணவன் கொண்டு சென்ற செல்போன் எண்ணை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணித்தனர்.
அந்த மாணவனின் செல்போன் வேலூரை கடந்து செல்வது தெரியவந்து.
உடனடியாக தனிப்படை போலீசார் பின் தொடர்ந்து சென்றனர் சற்று நேரத்தில் அந்த மாணவன் செல்போன் காஞ்சிபுரத்தை காட்டியுள்ளது தனிப்படையினர் காஞ்சிபுரத்துக்கு சென்றுள்ளனர் அதற்குள் அந்த மாணவனின் செல்போன் சென்னை அருகே மதுரவாயிலை காட்டியது.
தனிப்படை போலீசார் மதுரவாயல் சென்றுள்ளனர். அதற்குள் அந்த மாணவன் அடிக்கடி செல்போனை ஆப் செய்து விட்டு தேவைப்படும்போது மட்டுமே ஆன் செய்துள்ளார் இதனால் சைபர் கிரைம் போலீசாருக்கு அடிக்கடி அந்த மாணவனின் செல்போனை தொடர்பு கொள்ள பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது.
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அந்த மாணவன் இருந்த இடத்தை சரியான நேரத்தில் கண்டுபிடி த்தனர்.
மாணவனை நள்ளிரவே குடியாத்தம் கொண்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.அப்போது பெற்றோர் கண்டித்ததால் சென்னைக்கு சென்று விட்டதாக அந்த மாணவன் தெரிவித்தார்.
போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து 6 மணி நேரத்தில் அந்த மாணவனை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பிடித்த தனிப்படை போலீசாரை வேலூர் சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் பாராட்டினார்கள்.