உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க.வினர் 25 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2023-06-13 15:37 IST   |   Update On 2023-06-13 15:37:00 IST
  • அனுமதியின்றி பேனர் வைத்ததால் நடவடிக்கை
  • போலீசார் விசாரணை

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் பள்ளிகொண்டா வருகை தந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை வரவேற்றுபல இடங்களில் பேனர்களை வைத்தனர்.

அனுமதியின்றி பேனர்

அந்த பேனர்களை உரிய அனுமதின்றி வைத்ததாக கூறி நகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினார்கள்.

அதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியினர் நகராட்சி ஊழியர்களிடம் பேனர்களை அகற்றியது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பேனர்களை திரும்ப பெற்று அதை நகரின் முக்கிய இடங்களில் கட்டினார்கள். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

25 பேர் மீது வழக்கு பதிவு

இந்நிலையில் அனுமதின்றி பேனர்கள் வைத்ததாக குடியாத்தம் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே உரிய அனுமதின்றி பேனர் வைத்ததாக பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் லோகேஷ்குமார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

குடியாத்தம் பிச்சனூர் அரசமரதெரு சந்திப்பு பகுதியில் குடியாத்தம் நகர தலைவர் சாய்ஆனந்தன் பேனர் வைத்ததாக அவர் நகர இளைஞரணி தலைவர் சுகாஷ் உள்பட 25 பாரதிய ஜனதா கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News