பிரியாணி கடை மீதான நடவடிக்கையை சமூக வலைதளங்களில் பரப்ப கூடாது
- கலெக்டர் எச்சரிக்கை
- தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
வேலூர்:
வேலூர் காட்பாடி சாலையில் சித்தூர் பஸ் நிலையம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை புதியதாக ஓட்டல் திறக்கப்பட்டது.
திறப்பு விழா நாளான அன்று ஒரு நாள் மட்டும் ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பிரியாணி வாங்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடி இருந்தனர்.
பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றனர். இதனால் காட்பாடி - வேலூரை இணைக்கும் முக்கிய சாலையான அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் காலை நேரத்தில் அதிக வெயிலின் காரணமாக பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் அல்லது அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என்ற அடிப்படையில் அந்த ஓட்டலை தற்காலிகமாக மூடவும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வரும்பொழுது அதற்கான தகுந்த ஏற்பாடுகளை செய்து பின்னர் ஓட்டலை திறக்கும் படியும் அறிவுரை வழங்கப்பட்டது.
பின்னர் அந்த ஓட்டலின் உரிமம் மற்றும் இதர விதிமுறைகள் சரியாக உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஓட்டல் சார்பில் தங்கள் தவறை உணர்ந்து சரியான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதாக கடிதம் கொடுத்ததன் அடிப்படையில் அன்றைய தினம் மாலையே ஓட்டல் திறக்கப்பட்டது.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஒரு சிலர் இந்த ஓட்டல் பிரச்சனையை தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.