உள்ளூர் செய்திகள்

வேலூர் கோர்ட்டில் போலீசாரை தள்ளிவிட்டு தப்ப முயன்ற வாலிபர்

Published On 2023-03-16 15:06 IST   |   Update On 2023-03-16 15:06:00 IST
  • போலீசார் மடக்கி பிடித்தனர்
  • ஜெயிலில் அடைப்பு

வேலூர்:

வேலூர் அருகந்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ரெட் என்ற ராம்குமார் (வயது 23). இவர், கடந்த 2018-ம் ஆண்டு நண்பரை கொலை செய்து பாலாற்றில் புதைத்த வழக்கில் தொடர்புடையவர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் தேடி வந்தனர். மேலும், அவரை கைது செய்ய கோர்ட்டு பிடியாணை பிறப்பித்துள்ளது. இதற்கிடையில், காதல் தகராறில் வேலூர் காகிதபட்டறை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் மற்றும் அவரது நண்பர் ஏழுமலை ஆகியோரை கடந்த 6-ம் தேதி கத்தியால் குத்திய வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, கொலை வழக்கு தொடர்பாக கோர்ட்டுபிடியாணையை நிறைவேற்ற அவரை கைது செய்து ஆஜர்படுத்த பாதுகாப்புடன் நடவடிக்கை எடுத்தனர்.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கோர்ட்டுக்கு நேற்று பலத்த வேனில் ராம்குமார் நேற்று அழைத்து வரப்பட்டார். வேனில் இருந்தவருக்கு மதிய உணவினை போலீசார் வழங்கினர். அதை சாப்பிட்டதும் வேனில் இருந்தபடி கையை கழுவுவதுபோல் பாவ்லா காட்டிய ராம்குமார் திடீரென வேனில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடினார்.

அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர்கள் வெங்கடேசன், பிரகாஷ் ஆகியோர் அதிர்ச்சியடைந்து ராம்குமாரை துரத்தினர்.

கோர்ட்டு வளாகத்தில் போலீசார் ஒருவரை துரத்துவதை பார்த்த கோர்ட்டில் பணிக்கு வந்த ஏட்டுகள் கேசவன், முருகேசன் ஆகியோரும் தப்பியவரை விரட்டினர்.

ராம்குமார் கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியே ஓடி சர்வீஸ் சாலையை கடந்து தேசிய நெடுஞ்சாலையில் ஓடினார். ஆனால், விடாமல் துரத்திய போலீசார் உயிரை பணயம் வைத்து தேசிய நெடு ஞ்சாலையில் துரத்தினர்.

அதற்குள், ராம்குமார் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார்.

சுமார் 10 அடி உயரத்தில் இருந்து அவர் குதித்ததால் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. கீழே விழுந்தவரால் எழுந்திருக்க முடியாமல் இருந்தவரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் துறையினர் பிடித்தனர்.

பின்னர், அவருக்கு மருத்துவ முதலுதவி அளிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர். அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

போலீசாரை தள்ளிவிட்டு கோர்ட்டில் இருந்து தப்ப முயன்றதாக ராம்குமார் மீது ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் மேகநாதன் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் பணி செய்ய விடாமல் தடுத்தது, தப்பி ஓடியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News