குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் உள்ள அகண்ட திரையில் ஒரு சில கேமராக்களே இயங்குவதை படத்தில் காணலாம்.
75 கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் உள்ளது
- குடியாத்தம் பகுதியில் ரூ.18 லட்சத்தில் வைக்கப்பட்டிருந்தது
- தொடர் பைக் திருட்டை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
குடியாத்தம்:
சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பகுதியை குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையம் கண்காணித்து வருகிறது.
குடியாத்தம் நகராட்சி மற்றும் ஏராளமான கிராமங்கள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ளது.
அதன் கட்டுப்பாட்டுக்குள் ஏராளமான தீப்பெட்டி, பீடி தொழிற்சாலைகள், கைத்தறி நெசவு கூடங்கள், காலனி, தோல் தொழிற்சாலை, பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் என ஏராளமாக உள்ளது.
மேலும் குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் மிகப்பெரிய தினசரி மார்க்கெட் உள்ளது. உழவர் சந்தையும் உள்ளது. வேலூர் மாவட்டத்திலேயே அதிக அளவு நகை கடைகளையும் குடியாத்தம் நகரில் உள்ளடக்கியுள்ளது.
குடியாத்தம் நகரத்தைதாண்டி தமிழகத்தின் பிற பகுதியிலிருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் வாகனங்கள் சென்று வருகின்றன. எப்போதும் நெரிசல் மிகுந்த முக்கியமான ஒரு வியாபாரத் தலமாகவும் குடியாத்தம் நகரம் அமைந்துள்ளது.
இங்கு அடிக்கடி திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தாலும் புகார் மீது உடனடி நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் உள்ளது.
அதேபோல் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படாத நாளே இல்லை எனக் கூறும் அளவிற்கு தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டு நடைபெற்ற வண்ணம் உள்ளது.
குறிப்பாக அரசு மருத்துவமனை சாலையில் மருத்துவ மனைக்கு நோயாளி களுடன் வரும் அவரது உறவினர்கள் நோயாளிகள் உடைய மோட்டார் சைக்கிள் திருடு போகிறது.
அதேபோல் பஸ் நிலையம், உழவர் சந்தை பஜார், சந்தப்பேட்டை, நேதாஜிசவுக் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் திருடுபோன வண்ணம் உள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தும் அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. பெரும்பாலான வாகனங்கள் இன்சூரன்ஸ் காலாவதியாகி உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது சிக்கலாக உள்ளது. இருப்பினும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குறிப்பாக குடியாத்தம் நகர பகுதியில் திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் குடியாத்தம் கிராமிய பகுதிகள் மற்றும் பேர்ணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சமூகவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மோட்டார் சைக்கிள்கள் கர்நாடக மற்றும் ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு குடியாத்தம் செதுக்கரை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து ஆடுகளை திருடி சென்றனர். அதன் கண்காணிப்பு கேமரா பதிவுகளை அளித்தும் நடவடிக்கை இல்லை, தொடர்ந்து ஒரு மாதம் கழித்து மீண்டும் அதே பகுதியில் ஆடு திருட்டு நடைபெற்றது.
அதேபோல் குடியாத்தம் ெரயில் நிலையம் அருகே 2 திருட்டுகளும், நத்தம் கிராமம், சேம்பள்ளி, குடியாத்தம் டவுனில் பல இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ளது. இதுவரை குற்றவாளிகள் குறித்து துப்பு துலங்க வில்லை.
பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ. 18 லட்சத்தில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பெரும்பாலும் வேலை செய்யவில்லை.
குடியாத்தம் நகரில் உள்ள நகைக்கடை வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் வணிகர்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகள், நிதி நிறுவனத்தினர், கல்வி நிலையங்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என அனைத்து தரப்பினரும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு ரூபாய் சுமார் 18 லட்சம் வரை கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க கொடுத்தனர். அதன் பேரில் 98 அதிநவீன கேமராக்கள் நகரின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டது.
ஆனால் தற்போது 75 கேமராக்கள் வரை வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மணல் திருடர்களுக்கு இது வசதியாக போய்விட்டது அதேபோல் மோட்டார் சைக்கிள் திருடுபவர்களும், வீடு புகுந்து திருடுபவர்களும் அச்சமின்றி திருடுகிறார்கள். காலை நேரங்களிலே மணல் லாரிகள் சர்வ சாதாரணமாக செல்கிறது ஏனென்றால் கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாததால் கண்காணிப்பு இல்லாமல் பிடிப்படாமல் இருக்கிறது. கண்காணிப்பு கேமராக்கள் திருட்டையும், சமூக விரோத செயல்களையும் தடுக்க உதவியாக இல்லை. கண்காணிப்பு கேமராக்கள் சரி செய்ய அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குடியாத்தம் நகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் குறையவில்லை.
திருட்டு சம்பவங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் குடியாத்தம் பகுதிக்கு தனி கவனம் செலுத்தி வேலூரில் உள்ளதுபோல் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தனியாக குற்றப்பிரிவு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.