உள்ளூர் செய்திகள்

மேல்மருவத்தூர்-செங்குன்றத்தில் தனித்தனி விபத்து: 6 பேர் பலி

Published On 2023-06-15 14:27 IST   |   Update On 2023-06-15 14:27:00 IST
  • சென்டிவாக்கம் என்ற இடத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
  • விபத்து நடந்ததும் சாலையோரம் நிறுத்தி இருந்த லாரியை அங்கிருந்து ஓட்டி டிரைவர் தப்பி சென்று விட்டார்.

மதுராந்தகம்:

அச்சரப்பாக்கம் அருகே உள்ள காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவரது மனைவி ராணி(42). இவர்களது மகன் வழி பேத்தி அக்ஷயா (வயது 4).

நேற்று மாலை சேகர் தனது மனைவி மற்றும் பேத்தியுடன் செங்கல்பட்டு அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் 3 பேரும் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

அச்சரப்பாக்கம் அருகே சென்டிவாக்கம் என்ற இடத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட சேகர், அவரது மனைவி ராணி, பேத்தி அக்ஷயா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்...

செங்குன்றம் அருகே உள்ள அலமாதியில் இருந்து பால்கேன்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று நேற்று நள்ளிரவு செங்குன்றம் நோக்கி வந்து கொண்டு இருந்தது. வேனை வியாசர்பாடியை சேர்ந்த ராஜேந்திரன்(45) ஓட்டினார். உடன் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் உஜால்(25), மாணிக்ராய்(32) இருந்தனர்.

செங்குன்றம் அருகே அம்பேத்கர் நகர் பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பால்வேன் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோதியது. இதில் வேனின் முன்பகுதி நசுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் ராஜேந்திரன், உஜால், மாணிக்ராய் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்தியே பலியானார்கள். விபத்து நடந்ததும் சாலையோரம் நிறுத்தி இருந்த லாரியை அங்கிருந்து ஓட்டி டிரைவர் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News