உள்ளூர் செய்திகள்

81 ஆயிரம் பேருக்கு காசநோய் பரிசோதனை

Published On 2023-01-24 15:24 IST   |   Update On 2023-01-24 15:24:00 IST
  • ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால், காசநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • சேலம் மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி ஒரு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனமும் மற்றும் 16-ந்தேதி ஒரு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனமும் வழங்கப்பட்டது.

சேலம்:

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால், காசநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை கண்டறிய மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23 மாவட்டங்களுக்கு நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை தமிழக அரசு வழங்கியது.

2 வாகனங்கள்

சேலம் மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி ஒரு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனமும் மற்றும் 16-ந்தேதி ஒரு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனமும் வழங்கப்பட்டது.

இந்த 2 நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் 20 வட்டாரங்களிலும் பாதிப்பு உள்ள பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கடந்த 6 மாதங்களில் 151 கிராமங்களில் காசநோய் அறிகுறிகள் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 81 ஆயிரத்து 556 பேருக்கு காசநோய் அறிகுறிகள் உள்ளதா? என பரிசோதிக்கப்பட்டது. இதில் தற்போது வரை 7 ஆயிரம் பேருக்கு சளி, ரத்த பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. காசநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு ரூ.500 வழங்குகிறது

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மத்திய அரசின் நிகேஷ் போசன் யோஜனா திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து உதவியாக மாதந்தோறும் ரூ.500 சிகிச்சை காலம் முடியும் வரை நோயாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. வருகிற 2025-ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 87 சதவீதம் பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறிந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, தமிழக அளவில் சேலம் மாவட்டம் 4-வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News