உள்ளூர் செய்திகள்

தார் சாலையை மறைத்து கல்தூண் நட முயற்சி:தட்டிக்கேட்ட தம்பதிக்கு கொலை மிரட்டல்- டவுன் போலீசார் விசாரணை

Published On 2023-10-26 14:31 IST   |   Update On 2023-10-26 14:31:00 IST
  • தார் சாலையை ஒரு நபர், சிலருடன் வந்து கல் தூண்கள் நட்டு பாதையை மறைக்க முயற்சி செய்தார்.
  • கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தம்பதி டவுன் போலீசில் புகார் செய்துள்ளனர்.

நெல்லை:

நெல்லை டவுன் அரசன் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி அய்யம்மாள் (வயது 50). இவர் நெல்லை டவுன் போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2013-ம் ஆண்டு முதல் அரசன் நகர் பகுதியில் வீடுகட்டி மின் இணைப்பு பெற்று குடியிருந்து வருகிறேன். எங்கள் பகுதியில் சுமார் 20 வீடுகள் உள்ளன. இந்த தெருவில் 500 மீட்டர் தூரத்தில் தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த தார் சாலையை ஒரு நபர், சிலருடன் வந்து சாலையில் குறுக்காக கல் தூண்கள் நட்டு பாதையை மறைக்க முயற்சி செய்தார். இதற்கு அந்த பகுதியில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த நபர் மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் வந்து தார் சாலையை மறைத்து கல்தூண் நடுவதற்கு முயற்சி செய்தார்கள். இதனை நாங்கள் தட்டிக்கேட்டபோது என்னையும், எனது கணவரையும் பார்த்து அவதூறாக பேசினார்கள். சாலையை மறைக்க முயற்சி செய்ததை தட்டிக்கேட்டதால் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

இது தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News