விதவைப் பெண் போலீஸ் கமிஷனரிடம் புகார்
திருச்சி.
திருச்சி தென்னூர் பட்டாபிராமன் சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மனைவி ஆலிஸ் மேரி (வயது 57) இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
எனது கணவர் ராஜசேகர் கடந்த 2019- ம் ஆண்டு இறந்து விட்டார். எனக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். மேற்கண்ட முகவரியில் வீடும் 2 கடைகளும் உள்ளது. அதனை எனது மகள் வழிபேரன் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளோம். அந்தக் கடையில் ஒருவர் வாடகைக்கு இருந்தார். பின்னர் முன் பணத்தைப் பெற்றுக் கொண்டு கடையை ஒப்படைத்து விட்டார். இந்த நிலையில் சிலர் கடையை சட்டத்துக்கு புறம்பாக திறக்க முயற்சி செய்து வருகிறார்கள். தட்டிக் கேட்டபோது என்னை 3 பேர் தாக்கினார்கள். இது தொடர்பாக தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்து 3 பேர் மீது சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆகவே விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.