தி.மு.க. பிரமுகர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு
- துறையூரில் பண மோசடி புகார்தி.மு.க. பிரமுகர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு
- மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தொகையை மூன்று பேரிடமும் கொடுத்ததாக கூறப்படுகிறது.
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சனம் (45). இவர் சிங்களாந்தபுரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட சர்.பிட்டி. தியாகராய நகர் பகுதியில் வீட்டு மனை வாங்குவதற்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த வாலீஸ்புரம் கிராமத்தை சேர்ந்த தமிழரசன் (38), சித்திரப்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் (45) ஆகிய இருவரும் அஞ்சனத்தை அணுகி, தேவாங்கர் நகர் பகுதியை சேர்ந்த நில புரோக்கரான ராஜா (45) என்பவருக்கு தெரிந்தவரிடம் வீட்டு மனை விற்பனைக்காக உள்ளதாக கூறி அறிமுகப்படுத்தியுள்ளனர். பின்னர் நிலத்தை 11 லட்சம் ரூபாய்க்கு கிரையம் பேசி, அட்வான்ஸ் தொகையாக மூன்று தவணைகளில் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தொகையை மூன்று பேரிடமும் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும், நிலத்தை கிரையம் செய்து தராததால் தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை அஞ்சனம் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் மூன்று நபர்களும் பல்வேறு காரணங்களை கூறி தட்டி கழித்துள்ளனர். இதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அஞ்சனம் இது தொடர்பாக முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மினிடம் புகார் மனு அளித்தார்.
இப்புகார் மனுவின் பேரில் விசாரணை மேற்கொண்ட துறையூர் போலீசார் மூன்று பேரின் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான மூன்று பேரையும் துறையூர் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். மோசடி வழக்கில் முதல் குற்றம் சாட்டப்பட்ட நபராக உள்ள ராஜா என்பவர் மதுராபுரி ஊராட்சி 8- வார்டு உறுப்பினராகவும், இரண்டாவது குற்றம் சாட்டப்பட்ட நபராக உள்ள தமிழரசன் என்பவர் திருச்சி வடக்கு மாவட்ட கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளராகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.