உள்ளூர் செய்திகள்

தா.பேட்டை அருகே வாலிபர் மர்ம சாவு

Published On 2023-10-19 13:16 IST   |   Update On 2023-10-19 13:16:00 IST
  • திருச்சி தா.பேட்டை அருகே வாலிபர் மர்மான முறையில் உயிரிழந்தார்
  • போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயற்சி

தா.பேட்டை, 

திருச்சி தா.பேட்டை அடுத்த வாளசிராமணி ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 39). இவருக்கு திருமணம் ஆகி கீதா என்ற மனைவியும், ஹாசினி (11), ஹரிணி (10) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். கணேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

மேலும் இவருக்கு மனநிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கீதா தனது இளைய மகளுடன் புத்தனாம்பட்டியில் வசித்து வருகிறார். மேலும் அப்பகுதியில் சத்துணவு உதவியாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.

மற்றொரு மகள் ஹாசினி தந்தை வீட்டில் தாத்தா, பாட்டியுடன் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணேசன் அதிக மது போதையில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மது போதையில் வீட்டிற்கு வந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டு வாசலில் தடுக்கி கதவில் மோதியதில் முகம், தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இந்தார்.

இதையடுத்து அவரது உடலை போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதுகுறித்து போலீஸ் அவசர உதவி 100 என்ற எண்ணிற்கு தகவல் சென்றுள்ளது. பின்னர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

அதனைதொடர்ந்து தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து கணேசன் குடிபோதையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News