வனத்தொழில் பழகுனர் பணிக்கு எழுத்து தேர்வு
- வனத்தொழில் பழகுனர் பணிக்கு எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
- தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு
திருச்சி,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இன்று தமிழகத்தில் 7 பெரு நகரங்களில் தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் பதவிகளுக்கான போட்டி தேர்வு நடந்தது. திருச்சியில் 8 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. இதில் 2000க்கும் மேற்பட்ட நபர்கள் தேர்வு எழுதினர்.
இந்த நிலையில் ஒரு சில மையங்களில் 5 நிமிடம், 10 நிமிடம் தாமதமாக வந்த தேர்வர்களை தேர்வு மையத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
திருச்சி வாசவி வித்யாலயா பள்ளி மையத்துக்கு தேர்வு எழுத வந்த சிதம்பரத்தைச் சேர்ந்த இளைஞர் மற்றும் விருதுநகரை சேர்ந்த இளைஞர்கள் 3 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக சிதம்பரம் இளைஞர் கூறும் போது, 2018 ல் நடைபெற்ற வனத்தொழில் பழகுநர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றேன். பின்னர் நடைபெற்ற உடற்பகுதி தேர்வில் என்னால் பங்கேற்க இயலாமல் மீண்டும் இப்போது எழுத்து தேர்வு எழுத வந்தேன். முதலில் தமிழகத்தில் பரவலாக மையங்களை அறிவித்தனர். அதன்படி சிதம்பரத்தில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு விண்ணப்பித்தேன். ஆனால் கடைசி நேரத்தில் தமிழகத்தில் 7 பெருநகரங்களில் மட்டுமே மையங்கள் அறிவிக்கப்பட்டது. திருச்சி மையத்துக்கு என்னை மாற்றி விட்டார்கள்.
சிதம்பரத்தில் இருந்து ரயிலில் வந்தேன். ரயில் தாமதமாக திருச்சி அங்கிருந்து ஆட்டோ பிடித்து தேர்வு மையத்துக்கு வந்தேன்.9.5 மணிக்கு மையத்துக்கு வந்து விட்டேன். ஆனால் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இன்று பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் பொறியியல் தேர்வு, வெள்ளிக்கிழமை சுற்றுச்சூழல் தேர்வு நடக்கிறது. எனக்கு இருக்கும் பொருளாதார நெருக்கடியில் இங்கு விடுதியிலா?தங்க முடியும். வேலை தேடும் இளைஞர்களை இப்படி அலைக்கழிப்பது வேதனையாக இருக்கிறது என கூறினார்.