உள்ளூர் செய்திகள்

திருச்சியில் வெவ்வேறு விபத்துகளில் மாணவி, சிறுவன் பலி

Published On 2022-10-25 09:21 GMT   |   Update On 2022-10-25 09:21 GMT
  • குமார் தனது மனைவி சரஸ்வதி (30) மற்றும் அவரது குழந்தைகள் யாழினி (11), யமுனா (13), தனுஷ்கா (3) தட்சணா (2) ஆகியோரை அழைத்துக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
  • அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது

திருச்சி,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 35). இவர் தனது மனைவி சரஸ்வதி (30) மற்றும் அவரது குழந்தைகள் யாழினி (11), யமுனா (13), தனுஷ்கா (3) தட்சணா (2) ஆகியோரை அழைத்துக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

கரையான்பட்டி பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 5 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் யாழினிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு யாழினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் சாலையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மணப்பாறை கரையான்பட்டி பகுதியைச் சேர்ந்த செகப்பாயி (60) என்ற பெண்மணியும் காயமடைந்தார். இது தொடர்பாக காரை ஓட்டிச் சென்ற மண்ணச்சநல்லூர் பழைய நல்லூர் பிடாரி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள பூனாம்பாளையத்தை அடுத்த மந்திரியார்ஓடை பகுதியை சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவரது மகன் பிரகாஷ் (9). அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று பிரகாசின் பெற்றோர் வெளியூர் புறப்பட்டு சென்றனர். மகனை பக்கத்து வீட்டை சேர்ந்தவரிடம் ஒப்படைத்து சென்றிருந்தனர். இதற்கிடையே அவர் தனது விவசாய நிலையத்தை உழுவதற்காக சென்றார். அவருடன் பிரகாசும் டிராக்டரில் சென்றிருந்தார்.

உழவுப்பணி நடைபெற்றபோது எதிர்பாராதவிதமாக டிராக்டரில் அமர்ந்திருந்த பிரகாஷ் தவறி விழுந்தார். இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உடல் நசுங்கி பலியானார். இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News