உள்ளூர் செய்திகள்

வேளாண் கடன் பெற சான்றிதழ் வழங்க கோரிக்கை

Published On 2022-07-29 09:55 GMT   |   Update On 2022-07-29 09:55 GMT
  • உரிய காலத்தில் விவசாய கடன்களை பெற முடியாமல் தவிக்கும் விவசாயிகள் வெளி நபர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
  • விவசாயிகள் வேளாண் கடனை உரிய காலத்தில் பெற்று, சாகுபடி உள்ளிட்ட பணிகளை தொடங்க விவசாய நிலங்களை அளவிட்டு, உரிமையாளர்களுக்கோ, குத்தகைதாரர்களுக்கோ தாமதமின்றி உடனடியாக கடன் பெற சான்றிதழ் வழங்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

திருச்சி :

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் மா.பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மா.பிரதீப்குமார் கலந்துகொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் எஸ்.செல்வம் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகளுக்கு வேளாண்மை சார்ந்த கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக விவசாயிகளுக்கு அந்தநத பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலத்தின் அளவு, சாகுபடி செய்யும் பயிர்கள் என்னென்ன, சொந்த நிலத்தில் சாகுபடி செய்யப்படுகிறதா அல்லது அது குத்தகை நிலமா என்பது உள்ளிட்ட விபரங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கடன் பெறும் வகையில் கிராம நிர்வாக அலுவலர்களால் முறையான ஆய்வு செய்து சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் உரிய காலத்தில் விவசாய கடன்களை பெற முடியாமல் தவிக்கும் விவசாயிகள் வெளி நபர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் குறிப்பிட்ட காலத்தில் விவசாய பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை நேரடியாக அணுகும்போது, உரிய சான்றிதழ் இல்லாமல் வேளாண் கடன் வழங்க முடியாது என்று கூறி அதிகாரிகள் மறுத்து விடுகிறார்கள். இதுபோன்ற நெருக்கடியான நிலையை தவிர்க்கும் வகையில், விவசாயிகள் வேளாண் கடனை உரிய காலத்தில் பெற்று, சாகுபடி உள்ளிட்ட பணிகளை தொடங்க விவசாய நிலங்களை அளவிட்டு, உரிமையாளர்களுக்கோ, குத்தகைதாரர்களுக்கோ தாமதமின்றி உடனடியாக கடன் பெற சான்றிதழ் வழங்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் விரைவில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Tags:    

Similar News