கார் பாலத்தில் மோதிய விபத்தில் ஒருவர் பலி
- திருச்சி சமயபுரம் அருகே இன்று அதிகாலை கார் பாலத்தில் மோதிய விபத்தில் ஒருவர் பலியான நிலையில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
- முந்தி சென்ற அரசு பஸ் உரசியதால் விபரீதம்
திருச்சி,
திருவண்ணாமலை மாவட்டம் தானியப்பாடியை சேர்ந்தவர் குமார். இவர் தனது மகன் அருள்முருகன், உறவு பெண் சுமதி மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.அருள் முருகன் காரை ஓட்டி சென்றார். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் அருகே பெருவள வாய்க்கால் வளைவில் கார் சென்று கொண்டிருந்த போது, பின்னால் சென்னை நோக்கி வந்த அரசு பஸ், காரை முந்தி சென்றது.இதில் பஸ், காரை உரசியதால் நிலை தடுமாறிய கார், தாறுமாறாக ஓடி அங்குள்ள பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.காரின் முன் பகுதி நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கிய குமார் சம்பவ இடத்திலேயே ரத்த ெவள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிந்தனர்.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.தகவல் அறிந்த அறிந்து விரைந்து வந்த சமயபுரம் போலீசார், குமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.