பெண் ஊராட்சி மன்ற தலைவரின் மண்டையை உடைத்த தம்பதி
- கழிவு நீர் நிலத்தடி நீரோடு கலப்பதாக குற்றம்சாட்டி, பெண் ஊராட்சி மன்ற தலைவரின் மண்டையை உடைத்த தம்பதி
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
திருச்சி,
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கீழ முல்லைக்குடியை சேர்ந்த வர் சண்முகம். இவரது மனைவி கோகிலா (வயது 35). இவர் கீழ முல்லைக்குடி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.இந்த நிலையில் கீழ முல்லைகுடி பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.இதில் கழிவு நீர் அந்தப் பகுதிைய சேர்ந்த மகேஸ்வரி என்பவரது நிலத்திற்கு அருகே செல்வதாக கூறப்படுகிறது.இதனால் எனது நிலத்தின் அருகே கழிவு நீர் கால்வாய் வந்தால் விவசாயம் செய்ய முடியாது என கூறிய மகேஸ்வரி, தனது கணவர் தனபாலை அழைத்துக் கொண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று ஊராட்சி மன்ற தலைவர் கோகிலாவிடம் தகராறு செய்தார்.அப்போது கோகிலா, இருவரையும் அலுவலகத்தை விட்டு வெளியே செல்லுங்கள் என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கு கிடந்த கல்லை எடுத்து கோகிலாவின் தலையில் அடித்ததாக கூறுகின்றனர்.இதில் கோகிலாவின் மண்டை உடைந்தது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் கோகிலாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமைனயில் சேர்த்தனர்.இந்த சம்பவம் குறித்து கோகிலா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் மகேஸ்வரியும், தனபாலும் தங்களை ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா தாக்கி விட்டதாக கூறி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதி உள்ளது.