அரியமங்கலம் குப்பை கிடங்கில் தீ
- அரியமங்கலம் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது
- தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி
திருச்சி,
அரியமங்கலம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. சுமார் 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் பல ஆண்டுகளாக இங்கு கொட்டப்பட்டு வந்தது. இதனால் அரியமங்கலம் குப்பை கிடங்கில் மலைபோல் குப்பைகள் தேங்கி கிடந்து வந்தது/
இந்நிலையில் அரியமங்கலம் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் அதில் இருந்து கிளம்பிய புகை அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகராட்சி மேயர் அன்பழகன், நகர பொறியாளர் சிவபாதம் மற்றும் அதிகாரிகள் சென்று குப்பை கிடங்கில் பற்றிய தீயை அணைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு 3 தீயணைப்பு வாகனங்களும், 10-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தண்ணீர் டேங்கர் லாரிகளும் சென்று, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. அரியமங்கலம் குப்பை கிடங்கில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு குப்பைகள் எரிந்ததால், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மற்றும் அரியமங்கலம் எஸ்.ஐ.டி, யில் இருந்து மேலகல்கண்டார் கோட்டை செல்லும் சாலையில் புகை மூட்டங்களுடன் காணப்பட்டது. தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. அப்போது தீயணைப்பு வீரர்கள் தீ பரவுவதை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.