திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி
- திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி செய்தார்
- தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால் பரபரப்பு
திருச்சி:
திருச்சி சமயபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவலரான குருசாமி என்பவர் மகன் மூர்த்தி (வயது64). பி.எஸ்.சி பட்டதாரியான இவர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டி வந்தார். மேலும் மாநகராட்சி ஊழியர் இரண்டு பிச்சைக்காரர்களை வைத்து இவரை அடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரிடம் இருந்த ஓட்டுனர் உரிமம் மற்றும் 110 ரூபாய் ரொக்கத்தை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததன் பேரில் அந்த மாநகராட்சி ஊழியரிடம் மன்னிப்பு கடிதம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இப்பிரச்சினை முடியாமல் தொடர்ந்து வந்த நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான மூர்த்தி திருச்சி மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் வரவேற்பு அறையில் டீசலை தன் உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து மீட்டதுடன் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினரின் கடும் சோதனைக்கு பிறகே கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படும் நிலையில் இதுபோன்ற எரிபொருளை கொண்டு வந்து தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அங்கிருந்த மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இவர் தி.மு.க. தொண்டராக இருப்பதாக கூறப்பட்டது.