24 மணிநேரமும் செயல்படும் வகையில் பொது சுகாதார மையம் -பொதுமக்கள் எதிர்பார்ப்பு
- பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொது சுகாதார மையம் அமைக்கப்பட்டு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
- இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர்.
கே.கே.நகர
திருச்சி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொது சுகாதார மையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக சுப்பிரமணியபுரம் மற்றும் விமான நிலையம் பகுதியில் சுகாதார மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தினை பல்வேறு பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் .ஆனால் இந்த மையங்களில் இரவு நேரங்களில் சுமார் 11 மணிக்கு மேல் செல்லும் நோயாளிகள் பயன்பெற முடியாத நிலை இருந்து வருகிறது. இரவு 11 மணிக்கு மேல் இந்த மையங்களுக்கு செல்லும் நோயாளிகள் உடனடியாக திருச்சி பொது மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு, அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் மிகவும் ஆபத்தான நிலையில் செல்லும் நோயாளிகளுக்கு எந்தவித முதலுதவியும் பெற முடியாத நிலை இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக திருச்சி மாநகரின் தற்போது அதிக வளர்ச்சி பெறும் பகுதியான 63 மற்றும் 64வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் அருகில் எந்தவித சுகாதார மையமோ அல்லது பொது மருத்துவமனையோ இல்லாத காரணத்தினால் அவசர சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக முதியவர்களும், குழந்தைகளும் முதலுதவி சிகிச்சை கூட செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகளை நாடிச்செல்லும் நிலை இருந்து வருகிறது. ஏற்கனவே இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் சுந்தர் நகர் பகுதியில் பொது சுகாதார மையம் இயங்கி வந்தது பல்வேறு காரணங்களால் அந்த மையமானது மூடப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர். இரவு நேரங்களில் மேற்கண்ட பகுதியில் வாகன வசதி ஏதும் இன்றி சிக்கி தவிக்கும் நோயாளிகள் உடனடியாக மருத்துவ உதவி பெறுவதற்கு புது சுகாதார மையம் அமைக்கப்பட்டால் பெரும் உதவியாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் குறிப்பாக கே.சாத்தனூர், வடுகபட்டி மற்றும் ஓலையூர் உள்ளிட்ட கிராமங்களில் வசித்து வரும் மக்கள் பயன்படுத்தும் வகையில் இப்பகுதியில் பொது சுகாதார மையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.