உள்ளூர் செய்திகள்

மரங்கள் வெட்டி அகற்றப்படும் காட்சி.

பனமரத்துப்பட்டியில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டி அகற்றம்

Published On 2022-08-01 09:04 GMT   |   Update On 2022-08-01 09:04 GMT
  • ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1911-ம் ஆண்டு ரூ.9.68 லட்சம் மதிப்பில் பனமரத்துப்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது.
  • இதனை தொடர்ந்து ஏரி மறுசீரமைப்பு பணிக்கு தமிழக அரசு ரூ.98 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

சேலம்:

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1911-ம் ஆண்டு ரூ.9.68 லட்சம் மதிப்பில் பனமரத்துப்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் சேலம் மாநகர மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக தீர்த்து வைத்த பெருமை இந்த ஏரிக்கு உண்டு. 1924-ம் ஆண்டு சேலம் மாநகருக்கென மேட்டூர் தனிக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது.

அதே நேரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் தலமாக இருந்த பனமரத்துப்பட்டி ஏரியில் சினிமா படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்தது. எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., ெஜயசங்கர், விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த பல திரைப்படங்கள் இங்கே படமானது குறிப்பிடத்தக்கது. இப்படி சிறப்பு வாய்ந்த பனமரத்துப்பட்டி ஏரி 2137.92 ஏக்கர் பரப்பளவும், 168 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது.

சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிக்கு சுற்றியுள்ள ஜருகுமலை, போதமலை, வரட்டாறு, கூட்டாறு ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்து நிரம்பும். அரசு சார்பில் ஏரி பராமரிக்கப்படாததாலும், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் ஏரிக்கு நீர்வரத்து இன்றி கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. அத்துடன் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் ஏரிக்கு தண்ணீர் வரத்துக்கு வழியில்லாமல் ஆனது.

இந்த நிலையில் பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைப்பது தொடர்பாக அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து ஏரி மறுசீரமைப்பு பணிக்கு தமிழக அரசு ரூ.98 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

முதற்கட்டமாக ஏரியில் பரந்து விரிந்து காணப்படும் சீமை கருவேல மரங்கள் மற்றும் பல்வேறு வகை விலை உயர்ந்த மரங்களை அகற்றும் வகையில் டெண்டர் விடப்பட்டது. இந்த மரங்களை வெட்டி எடுத்துக்கொள்ள சேலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் சுமார் ரூ.1.84 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

இதையடுத்து அந்த நிறுவனம், ஏரியில் உள்ள மரங்களை வெட்டி எடுக்கும் பணியை தொடங்கி உள்ளது. நாள்தோறும் ஏராளமான தொழிலாளர்கள் வந்து மரங்களை வெட்டி, அவற்றை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக மரங்கள் வெட்டும் கருவி, அரிவாள், கத்தி, கோடாரி, வாள் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. பெரிய மரங்கள் கயிறு கட்டி வெட்டி சாய்க்கப்படுகின்றன.பின்னர் அங்கு வைத்தே நீளமாக அளவீடு செய்து, மரங்கள் துண்டு துண்டாக வெட்டி, லாரிகளில் ஏற்றப்படுகின்றன.

குறிப்பாக விறகுகள் மற்றும் வீட்டு உபயோகத்துக்கு பயன்படும் மர கட்டைகள், பலகைகள் என தனித்தனியாக தரம் பிரித்து லாரிகளில் ஏற்றப்படுகிறது. தினமும் ஏராளமான லோடுகள் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் மரங்கள் நிறைந்து பசுமையாக காணப்பட்ட ஏரி, கொஞ்சம், கொஞ்சமாக வெட்ட வெளியாக மாறி வருகின்றன.

Tags:    

Similar News