ஊட்டியில் மழையில் நனைந்தபடி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
- வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
- பகலில் வெயிலும், இரவு நேரத்தில் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவுகிறது
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகினை கண்டு ரசிக்கவும், சுற்றுலா தலங்களை பார்வையிடவும் தினந்தோறும் வெளி மாநிலங்கள், வெளிமாவட்ட ங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை குறைந்துள்ள நிலையில் கடந்த சில நாள்களாக பகலில் வெயிலும், இரவு நேரத்தில் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவுகிறது. மேலும் அதிகாலையில் கடுங்குளிரும் வாட்டுகிறது.
இந்த குளு,குளு சீசனை அனுபவிக்க வார இறுதி நாட்களில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஊட்டி, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, தொடா் சாரல் மழையும் பெய்தது.
ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மழையையும் பொருட்படுத்தாமல், மழையில் நனைந்தபடி தாவரவியல் பூங்கா,
ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். மேலும் ஊட்டியில் நிலவிய கால நிலையையும் வெகுவாக ரசித்தனா்.
வார விடுமுறை என்பதால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.