உள்ளூர் செய்திகள்

பாளை முருகன்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் குடில்.

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை- நெல்லை தேவாலயங்களில் இன்று இரவு சிறப்பு பிரார்த்தனை

Published On 2022-12-24 09:52 GMT   |   Update On 2022-12-24 09:53 GMT
  • நெல்லை மாவட்டத்திலும் உள்ள தேவாலயங்கள், சபைகள் உள்ளிட்டவை அலங்கரிக்கப்பட்டு இரவில் ஜொலித்து வருகிறது.
  • கதீட்ரல் பேராலயத்தில் அதிகாலை ஜெபமானது காலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

நெல்லை:

இயேசு கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். கிறிஸ்தவர்களின் இல்லங்களுக்கு பாடகர் குழுவினர் வந்து பாடல்களை பாடி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிப்பார்கள்.

இதுதவிர, தேவாலயங்களிலும், வீடுகளிலும் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு, விளக்குகளால் அலங்கரித்து வைத்திருப்பார்கள். இதன் தொடர்ச்சியாக நாளை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும். அதன்படி நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இதனை ஒட்டி நெல்லை மாவட்டத்திலும் உள்ள தேவாலயங்கள், சபைகள் உள்ளிட்டவை பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் ஜொலித்து வருகிறது. இன்று (சனிக்கிழமை) இரவு 11.30 மணிக்கு சிறப்பு ஆராதனையும், நாளை காலை மற்றும் மாலை சிறப்பு பிரார்த்தனையும் நடக்க இருக்கிறது. பாளை தெற்கு பஜார் சவேரியார் ஆலயம், சீவலப்பேரி சாலையில் உள்ள அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் கிறிஸ்து பிறப்பு குறித்த குடில்கள் மற்றும் சொரூபங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

முருகன் குறிச்சி கதீட்ரல் பேராலயத்தில் அதிகாலை ஜெபமானது காலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறும். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். பண்டிகையை ஒட்டி நெல்லை மாநகரப் பகுதியில் இன்று இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News