உள்ளூர் செய்திகள்

கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு

Published On 2023-08-01 09:40 GMT   |   Update On 2023-08-01 09:40 GMT
  • நாட்டு தக்காளி தற்போது 150 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டு வருகிறது.
  • தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

கோவை,

கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

தற்போது தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் மழை பெய்து வருவதால், விவசாயிகள் அறுவடை பணிகளில் ஈடுபடவில்லை. இதனால் மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து குறைந்து வருகிறது.

ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. எனவே அங்கும் விவசாயிகள் அறுவடை பணிகளை தொடங்குவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தற்போது தென் மாநிலங்களில் அதிகமாக தக்காளி பழங்களை இறக்குமதி செய்து வருகின்றனர். எனவே ஆந்திரா, கர்நாடகாவில் தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் அவற்றின் விலை கடந்த சில மாதங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

கோவை காந்திபுரம் தியாகி குமரன் மார்க்கெ ட்டில் இன்று ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.130க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.140 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட் சில்லரை விலை கடைகளில் நாட்டு தக்காளி தற்போது 150 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டு வருகிறது.

தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். கிலோ கணக்கில் தக்காளி வாங்கியவர்கள் தற்போது, 100, 200 கிராம் கணக்கில் தக்காளியை வாங்கி செல்வதை காண முடிகிறது.

இதுகுறித்து தியாகி குமரன் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கோவைக்கு சரக்கு லாரிகள் மூலம் தக்காளி பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

ராஜஸ்தான், புதுடெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. எனவே அவர்கள் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அதிகளவில் தக்காளி பழங்களை கொள் முதல் செய்து வருகின்றனர். இதனால் தற்போது கோவை மார்க்கெட்டுகளில் தக்காளி வரத்து குறைந்ததுடன், விலையும் உயர்ந்து காணப்படுகிறது.

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்னும் ஒரு சில வாரங்களில் தக்காளி அறுவடை தொடங்க உள்ளது. எனவே கோவை சந்தைக்கு வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது தக்காளியின் விலை குறையும் என்றனர்.

கோவை தியாகி குமரன் மார்க்கெட் சந்தையில் காய்கறிகளின் விலை விவரம் (ஒரு கிலோ): கத்தரிக்காய்-60, வெண்டைக்காய்-60, உருளை க்கிழங்கு-30, பீட்ரூட்-30, புடலங்காய்-40, சுரைக்காய்-40, பீர்க்கங்காய்-40, மிளகாய்-80, வாழைக்காய்-40, பூசணிக்காய்-30, எலுமிச்சை-60, முருங்கை-50, கேரட்-50, பீன்ஸ்-100, முட்டைக்கோஸ்-25.

Tags:    

Similar News