பள்ளியில் டைல்ஸ் அமைக்க உண்டியல் பணத்தை கொடுத்த 3-ம் வகுப்பு மாணவனை படத்தில் காணலாம்.
தான் படித்த பள்ளிக்கு டைல்ஸ் அமைக்க உண்டியல் பணத்தை கொடுத்த மாணவன்
- 3- ம் வகுப்பு படிக்கும் மாணவன் தான் படிக்கும் பள்ளிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தனது நொறுக்கு தீணிக்காக பெற்றோர் கொடுத்த பணத்தை சேர்த்து வைத்துள்ளார்.
- உண்டியலில் இருந்த பணத்தை அப்படியே கொண்டுவந்து ஆசிரியரிடம் வழங்கியுள்ளார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 60-க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியில் அரசு நிதியில் சுமார் ரூ.15 ஆயிரம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த பள்ளியில் 3- ம் வகுப்பு படிக்கும் மாணவன் தான் படிக்கும் பள்ளிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தனது நொறுக்கு தீணிக்காக பெற்றோர் கொடுத்த பணத்தை சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த உண்டியலில் இருந்த பணத்தை அப்படியே கொண்டுவந்து ஆசிரியரிடம் வழங்கியுள்ளார்.
பின்னர் இந்த தகவல் அறிந்த அந்த மாணவனின் தந்தை அகரம் பேருந்து நிலையம் அருகே நகை அடகு கடை வைத்திருக்கும் சீனிவாசன் அந்த பள்ளி வகுப்பறைக்கு தேவையான டைல்ஸ் மற்றும் அதற்கு தேவையான மூலப்பொருள்களை தாமாக முன்வந்து வழங்கினார். இந்த தகவல் அப்பகுதி மக்கள் பயணிக்கும் வாட்சாப் மற்றும் முகநூலில் வைரலாக பரவியது.
இதன் காரணமாக அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் தங்களால் முடிந்த நிதியை அந்த பள்ளியின் வளர்ச்சிக்கு தாமாக முன் வந்து வழங்குகின்றனர். அந்த பள்ளியில் படிக்கும் 3-ம் வகுப்பு மாணவன் கொடுத்த சிறு தொகை தற்பொழுது அந்த பள்ளி வளர்ச்சி நிதியாக அதிகரிக்க உதாரணமாக இருந்த மாணவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.