பெண் பயணி தவறவிட்ட பையை அவரிடம் பஸ் டிரைவர் சிவக்குமார் வழங்கிய போது எடுத்தபடம்.
பஸ்சில் பெண் தவறவிட்ட பணம், நகையை ஒப்படைத்த டிரைவர்
- 15 பவுன் நகை, ரூ.3 லட்சம் பையுடன் கிடந்தது
- டிரைவரின் நேர்மையை பொதுமக்கள் பாராட்டினர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா அத்திப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட தேனிமலை பணிமனையில் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகின்றார்.
இவர் நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் நடத்துனர் இல்லா பஸ்சை திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு காலை 8.15 மணியளவில் ஓட்டி சென்றார். மதியம் சுமார் 12.15 மணிக்கு சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு அந்த பஸ் சென்றது. பயணிகள் அனைவரும் இறங்கியவுடன் டிரைவர் தனது சீட்டின் பின்புறம் பெண் பயணி ஒருவரின் கை பை இருப்பதை கண்டார்.
யாரோ பயணி தவறி விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்று எண்ணியவாறு அதை எடுத்த அவர் அதில் முகவரி ஏதேனும் இருக்கிறதா என பார்த்து உள்ளார்.
அதில் விலை உயர்ந்த செல்போனும், நகை டப்பாவும் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள நேர காப்பாளருக்கு அவர் தகவல் தெரிவித்தார். சுமார் 12.45 மணிக்கு பதட்டத்துடன் அழுதவாறு பெண் ஒருவர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை பஸ்கள் நிற்கும் இடத்தில் இருந்த ஒவ்வொரு பஸ்சாக பார்த்துக் கொண்டே வந்தார்.
இதை கவனித்த டிரைவர் சிவக்குமார் அந்த பெண் தனது பஸ்சில் வந்தவர் என்று அறிந்து அவரை அழைத்து விசாரித்தபோது பஸ்சில் பையை தவறவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர் பஸ்சில் இருந்து எடுத்த பையை பயணியிடம் காண்பித்தார்.
அதில் 15 பவுன் நகையும், ரூ.3 லட்சம் ரொக்கமும் செல்போனும் உள்ளது என அழுது கொண்டே கூறினார். அந்த பெண்ணை ஆசுவாசப்படுத்திய டிரைவர் சிவக்குமார் பஸ் நிலைய நேரக்காப்பாளர் முருகன் முன்னிலையில் அந்த பையை பெண் பயணியிடம் ஒப்படைத்தார்.
அதை திறந்து பார்த்த அந்த பெண் பயணி அதில் பணம், நகை, செல்போன் அனைத்தும் பத்திரமாக உள்ளது என கூறி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். மேலும் திருவண்ணாமலையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சிவக்குமாரின் நேர்மை திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து கழகத்தினர் வாழ்த்தி, பாராட்டினர்.