முருகாபாடி பெரிய ஏரி மதகு ஓட்டையால் வீணாகும் தண்ணீர்
- பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள முருகா பாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி சுமார் 140 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இந்த ஏரி பராமரிக்கப்படுகிறது.
முருகாபாடி பெரிய ஏரியில் சுமார் ஒரு வருட காலமாக மதகு உடைந்து தண்ணீர் நிற்காமல் வெளியேறி வருகிறது. இதனால் ஏரியில் தேங்கியுள்ள தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. அதன் காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக பொதுப்பணித் துறை அலுவலகத்திற்கு கிராம மக்கள் சார்பாகவும் முருகா பாடி சமூக முன்னேற்ற சங்கம் மூலமாகவும் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
ஊர் நாட்டாமை ஆரிமுத்து,.சங்கர்,பாபு,முருகா பாடி சமூக முன்னேற்ற சங்க தலைவர் மூ.சா. வீரபத்திரன் என்கிற தேசபக்தன் மற்றும் கோபி, ஏழுமலை ஆகியோர் இது சம்பந்தமாக போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தியிடம் மனு கொடுத்தனர்.
பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து உடனடியாக மதகு சீரமைக்க செய்ய ஏற்பாடு செய்வதாக அவர் கூறியுள்ளதாக கிராமமக்கள் கூறினர்.
தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.