விபத்துக்குள்ளான வேன்.
- 5 பேர் காயம்
- போலீசார் விசாரணை
செங்கம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் நேற்று திறன் மேம்பாட்டு திருவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள ஏராளமான இளைஞர்கள் வந்திருந்தனர். மேலபுஞ்சை கிராமத்தில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நபர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சி முடிந்து மினி வேன் ஒன்றில் மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது மினிவேன் புதுப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையின் அருகே இருந்த வயல்வெளியில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 5 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இது குறித்து புதுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.