உள்ளூர் செய்திகள்

அலைகழிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளை படத்தில் காணலாம்.

வந்தவாசியில் மாற்றுத்திறனாளிகள் முகாம் இடத்தை மாற்றியதால் அலைகழிப்பு

Published On 2022-08-12 15:05 IST   |   Update On 2022-08-12 15:05:00 IST
  • உடன் வந்தவர்கள் சிரமத்துடன் தூக்கிச் சென்ற அவலநிலை
  • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வந்தவாசி:

வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெறும் என திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த முகாம் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. முகாம் நடைபெறும் இடம் மாற்றப்பட்டது குறித்து எந்த முன்னறிவிப்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு தெரிவிக்க ப்படவில்லையாம்.

இதனால் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு காலை மாற்றுத் திறனாளிகள் வரத் தொடங்கினர். அங்கிருந்த போலீஸார் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முகாம் நடைபெறுவதாக கூறி அவர்களை திருப்பி அனுப்பினர். இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் கூறியதாவது:-

அலைகழிப்பு

நாங்கள் எங்கள் ஊரிலிருந்து பெரும் சிரமப்பட்டே முகாமில் பங்கேற்க வருகிறோம். எங்களால் தனியாக வர இயலாததால் உடன் ஒருவரை அழைத்துக் கொண்டும் வருகிறோம். ஆனால் இங்கு வந்தால் முகாம் நடைபெறும் இடத்தை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றி விட்டதாக தெரிவிக்கின்றனர்.

எங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் முகாம் இடத்தை மாற்றினால் நாங்கள் என்ன செய்வது. மீண்டும் இங்கிருந்து நடந்தோ, ஆட்டோவிலோ சுமார் அரை கி.மீ. தூரம் செல்ல வேண்டும்.

அரசின் நலத் திட்ட உதவிகளை பெறுவதற்கான மருத்துவப் பரிசோதனைக்கு நாங்கள் வந்தால், எங்களை அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர்.

எங்களை அலைக்கழித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் முகாமிலும் சரிவர ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவித்தனர். சக்கர நாற்காலி வசதி சரிவர செய்து தரப்படாததால் நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகளை உடன் வந்தவர் சிரமத்துடன் தூக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டதாக முகாமிலிருந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கமணியிடம் அவர்கள் புகார் கூறினர். 

Tags:    

Similar News