உள்ளூர் செய்திகள்

காதலியை பார்க்க நள்ளிரவில் சுவர் ஏறி குதித்த வாலிபர்

Published On 2022-08-10 14:28 IST   |   Update On 2022-08-10 14:28:00 IST
  • வேறொருவருடன் திருமணம் நடந்தது
  • திருடன் என நினைத்து போலீசார் பிடித்து விசாரணை

ஆரணி:

ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 7-ந் தேதி அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா நடந்தது. அப்போது ஆரணி போலீசார் அந்த கிராமத்தில் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் அங்குள்ள ஒரு வீட்டின் அருகே பைக் கொண்டு கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. போலீசார் அருகே சென்ற போது வாலிபர் ஒருவர் சுவர் மீது ஏறி அந்த வீட்டிற்குள் குதிக்க முயன்றார். இதைப் பார்த்த போலீசார் அந்த வாலிபரை திருடன் என நினைத்து மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவரை பைக்குடன் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அவர் போளூர் பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபர் என தெரியவந்தது. அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் வாலிபர் அங்கு சென்று விட்டார். இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த இளம் பெண்ணிற்கு ஆரணி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இத்தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த வாலிபர் உடனடியாக வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

பின்னர் தான் காதலித்து வந்த பெண்ணிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உன்னை நேரில் சந்தித்து பேச வேண்டும் என கூறி உள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்து சுவர் ஏறி குதித்த போது திருடன் என நினைத்து போலீசார் பிடித்தது தெரியவந்தது.

போலீசார் வாலிபரின் தந்தையை வரவழைத்து இதே போன்று தவறு செய்தால் உங்கள் மகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அறிவுரை கூறி எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News