கோப்புபடம்.
பெண் பலியான சம்பவம் - தெக்கலூர் நகருக்குள் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- பேருந்துகளில் ஏறும் பயணிகளை தகாத வாா்த்தைகளால் திட்டி இறக்கி விடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
- பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா்.
திருப்பூர் :
திருப்பூரில் இருந்து கோவை செல்லும் பெரும்பாலான தனியாா் பேருந்துகள் வழித்தடமான அவிநாசி, தெக்கலூா் நகருக்குள் வந்து செல்வதில்லை. மேற்கண்ட ஊா்களுக்காக பேருந்துகளில் ஏறும் பயணிகளை தகாத வாா்த்தைகளால் திட்டி இறக்கி விடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
இந்நிலையில் தெக்கலூா் பகுதியைச் சோ்ந்த தங்கவேல் மனைவி செல்வி( வயது 47) என்பவர் திருமுருகன்பூண்டி அருகே அம்மாபாளையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெக்கலூா் செல்வதற்காக தனியாா் பேருந்தில் ஏறியுள்ளாா். அப்போது பேருந்து கண்டக்டர்,அவிநாசி, தெக்கலூா் பகுதிக்குள் பேருந்து செல்லாது, புறவழிசாலை வழியாகதான் செல்லும் எனக் கூறி அப்பெண்ணை கீழே இறங்கு எனக் கூறியுள்ளாா்.
செல்வி பேருந்தில் இருந்து இறங்குவதற்குள் டிரைவர் பேருந்தை இயக்கியுள்ளாா். அப்போது செல்வி பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். உடனே அருகில் இருந்தவா்கள் செல்வியை மீட்டு கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
திருப்பூரில் இருந்து கோவை செல்லும் தனியாா், அரசுப் பேருந்துகள், அவிநாசி, தெக்கலூா் பகுதிக்குள் வராமல் சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் வழியாக சென்று வருவது வழக்கமாகிவிட்டது. திருப்பூா், கோவையில் இருந்து வரும் எந்தப் பேருந்துகளிலும் அவிநாசி, தெக்கலூா் உள்ளிட்ட பகுதி பயணிகளை ஏற்றுவதில்லை. தவறி சில நேரங்களில் பயணிகள் ஏறினாலும், தேசிய நெடுஞ்சாலை பாலம் என்று கூட பாா்க்காமல் இறக்கி விடப்படுகிறாா்கள். இப்பிரச்சனை தொடா்பாக பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் என அனைத்து தரப்பினரும் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது இப்பிரச்னையால் ஒரு பெண் உயிரிழந்தாா். ஆகவே மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.