உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

கோடை விடுமுறை திருமூர்த்தி அணையில் படகு சவாரி தொடங்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

Published On 2023-05-02 10:24 GMT   |   Update On 2023-05-02 10:24 GMT
  • உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுலாத்தலமாக உள்ளது
  • 1990ல் படகு சவாரி தொடங்கப்பட்டது.

உடுமலை :

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுலாத்தலமாக உள்ளது. இப்பகுதிக்கு சுற்றுலா வருவோர் திருமூர்த்தி அணையின் அழகை கண்டு ரசிக்கும் வகையில் தளி பேரூராட்சி சார்பில் 1990ல் படகு சவாரி தொடங்கப்பட்டது. பின்னர் கடந்த 2002ல், மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் படகுகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு ஒப்படைக்கப்பட்டது.அதன்படி படகுத்துறையில் 5 படகுகள் இயக்கப்பட்டு, பெரியவர்களுக்கு 25 ரூபாய், சிறியவர்களுக்கு 15 ரூபாய், நான்கு நபர் பயணிக்கும் கால்மிதி படகில் செல்ல அரைமணி நேரத்துக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.இதற்கு சுற்றுலாப்பயணிகளிடம் நல்ல வரவேற்பும் இருந்தது. ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பல ஆண்டுகளாக படகு சவாரி முற்றிலுமாக முடங்கிஉள்ளது.இதனால் அப்பகுதிக்கு சுற்றுலா வருவோர் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.

படிப்படியாக சுற்றுலா சார்ந்த வர்த்தகமும் அப்பகுதியில் முற்றிலுமாக குறைந்து விடுமுறை நாட்களில் கூட திருமூர்த்தி அணைப்பகுதி வெறிச்சோடுகிறது. இயக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்ட, படகுகளும் பயன்படுத்த முடியாத நிலையில் பரிதாப நிலைக்கு மாறியுள்ளது. படகுகளை புதுப்பிக்க செலவிட்ட தொகையை மகளிர் சுய உதவிக்குழுவினர் செலுத்த முடியாததும், படகு சவாரி முடங்க முக்கிய காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனவே தமிழக அரசு சுற்றுலா பயணிகள் தேவைக்காக படகு சவாரியை மீண்டும் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். வரும் கோடை காலத்தில் படகுகளை இயக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சுற்றுலாத்துறை, தளி பேரூராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

Similar News