உள்ளூர் செய்திகள்

திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பெண்கள் பலர் கலந்து கொண்ட காட்சி.

வீடுகளில் வரலட்சுமி விரத வழிபாடு

Published On 2022-08-05 08:03 GMT   |   Update On 2022-08-05 08:03 GMT
  • 16 வகை செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமியின் அருள் வேண்டி, இந்துக்கள் கடைப்பிடிக்கப்படக்கூடிய முக்கிய விரதமாகும்.
  • சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்க, செல்வ வளம், உடல் ஆரோக்கியம், தாலி பாக்கியம் நிலைக்க விரதத்தை கடைபிடித்தனர்.

திருப்பூர் :

வரலட்சுமி விரதம், வர மகாலட்சுமி நோன்பு என குறிப்பிடப்படும் இந்த விரதம் ஒவ்வொரு ஆடி மாதம் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமைகளில் 16 வகை செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமியின் அருள் வேண்டி, இந்துக்கள் கடைப்பிடிக்கப்படக்கூடிய முக்கிய விரதமாகும். ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி பெரும்பாலும் கொண்டாடப்படும். ஆனால் இந்த 2022ல் கடைசி ஆடி வெள்ளி அன்று பௌர்ணமி திதி வந்துவிடுவதால், அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையான இன்று 5-ந்தேதி (ஆடி 20) அன்று கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்க, செல்வ வளம், உடல் ஆரோக்கியம், தாலி பாக்கியம் நிலைக்க விரதத்தை கடைபிடித்தனர்.இந்த பூஜையின் போது மஞ்சள் கயிறு வைத்து மகாலட்சுமியிடம் பூஜித்து, அதை சுமங்கலி பெண்கள் அணிந்து கொண்டனர். நல்ல வரன் அமைய கன்னிப் பெண்கள் இந்த விரதமிருந்து பூஜையில் கலந்து கொண்டனர். வரலட்சுமி விரதத்தையொட்டி வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி தீப வழிபாடு நடத்தினர். வாசனை புகையை இல்லம் முழுவதும் நிறைத்து, கலசம் வைத்து அதை மகாலட்சுமியாக நினைத்து வணங்கினர்.கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு இவற்றை இட்டு, கலசத்தை பட்டாடையால் அலங்கரித்து, அதன் மீது மாவிலைகளை வைத்தனர். ஒரு தேங்காய் மீது மஞ்சளால் தேவியின் முகத்தை வடித்து பூஜை செய்து வழிபட்டனர். தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகங்களினால் ஆன லட்சுமி தேவியின் உருவச்சிலையை வைத்தும் வழிபட்டனர்.

தீபாராதனை செய்து, மகாலட்சுமிக்கு உகந்த இனிப்பு உள்ளிட்ட நைவேத்தியம் வைத்து படைத்தனர்.பூஜைகள், மந்திரங்கள் உச்சரித்து வழிபட்டு, கலசத்தில் வைத்த மஞ்சள் சரட்டை விரதமிருந்தவர் கையில் கட்டப்பட்டது.பின்னர் படைக்கப்பட்ட நைவேத்திய பொருட்களுடன், தாம்பூலம், மஞ்சள் புடவை போன்றவற்றை சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுத்து ஆசி பெற்றனர். திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு வீடுகளில் இந்த வரலட்சுமி விரத வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News