உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

விசைத்தறி தொழிலுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் - சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் முதல்வருக்கு மனு

Published On 2022-08-18 04:50 GMT   |   Update On 2022-08-18 04:50 GMT
  • 19 சதவீதம் கூலி உயர்வு பெற்று விசைத்தறி தொழிலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
  • 15 நாட்கள் கூட தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளது.

மங்கலம் :

அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை, திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களில் விசைத்தறி தொழிலை நம்பி சுமார் 2 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் இருக்கின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் கூலி உயர்வு பெறாமல் சென்ற மார்ச் மாதம் தான் தமிழக அரசு முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் 19 சதவீதம் கூலி உயர்வு பெற்று விசைத்தறி தொழிலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். மேலும் வரலாறு காணாத பஞ்சுவிலை ஏற்றத்தால் மாதம் 15 நாட்கள் கூட தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ள இந்த தொழிலுக்கு மின்கட்டண உயர்வு பேரிடியாக அமைந்துள்ளது.

விவசாயத்திற்கு அடுத்த படியாக உள்ள ஜவுளித்தொழில் ஏற்கனவே கடும் நெருக்கடியில் இயங்கிகொண்டு உள்ளது.குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களும் இரவு பகல் பாராமல் உழைத்தும் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். விசைத்தறி தொழில் கஷ்டங்களை கருத்தில் கொண்டு ஏற்கனவே தமிழக அரசு விசைத்தறிக்கு தனியாக சாதா விசைத்தறி என டேரிப் பிரித்து மானியமாக 750 யூனிட் மின்சாரம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் விசைத்தறிக்கு சுமார் 30சதவீத மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இவ்வளவு வருடம் செய்து வந்த தொழிலை விட்டு கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும் . எனவே அழிந்து வரும் இத்தொழிலையும் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறும் சுமார் 10 லட்சம் நபர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் . இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News