உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சுட்டெரிக்கும் கோடை வெப்பம் - அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் அவதி

Published On 2023-03-24 07:04 GMT   |   Update On 2023-03-24 07:04 GMT
  • நடப்பு ஆண்டு தொடங்கியதும் குளிர் பருவத்தில் வழக்கமான அளவு மழை பெய்யவில்லை.
  • கடந்த சில நாட்களாக திடீரென வெப்பக்காற்றுடன் வெயில் சுட்டெரிக்க துவங்கியது.

திருப்பூர் :

நடப்பு ஆண்டு தொடங்கியதும் குளிர் பருவத்தில் (ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம்) வழக்கமான அளவு மழை பெய்யவில்லை.தொடர்ந்து குளிரின் தாக்கம், இம்மாதம் 2வது வாரம் வரை நீடித்தது. குளிர்ந்த காலநிலை மாறும் முன்னதாக கடந்த சில நாட்களாக திடீரென வெப்பக்காற்றுடன் வெயில் சுட்டெரிக்க துவங்கியது. காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை வெயில் கடுமையாக இருக்கிறது.

குறிப்பாக உச்சி நேரத்தில் ரோட்டில் வெப்பக்காற்று வீசுவதால் மோட்டார் சைக்கிளில் சென்று வருவோர் கடும் சோதனைக்கு ஆளாகின்றனர். ரோட்டில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளும், வெளியே தலைகாட்டாமல் நிழல் உள்ள இடங்களில் தஞ்சமடைந்து விடுகின்றன.

வெயில் தாக்கம் துவங்கியதால் வீடுகளின் மொட்டை மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதும் அதிகரித்துள்ளது. தன்னார்வ அமைப்புகள் நீர்மோர் பந்தல் திறந்து மக்களின் தாகம் தணிக்கும் சேவையை தொடங்கி விட்டன. இவர்கள் தவிர துணிக்கடைகள் மற்றும் நிறுவனங்கள் சார்பிலும் குடிநீர் அல்லது நீர்மோர் வழங்கி வருகின்றனர்.

கோடை பருவம், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை சுட்டெரிக்கும். ஆரம்பமே இப்படி என்றால் அக்னி நட்சத்திர வெயில் காலம் எப்படி இருக்குமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோடை மழை கருணை காட்டினால் மட்டுமே கொளுத்தும் கோடை வெப்பம் தணிய வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News