உள்ளூர் செய்திகள்

 இரவு 8 மணிக்கு மேலும் பத்திரப்பதிவுக்காக காத்துருந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

பல்லடத்தில் இணையதள சர்வர் பிரச்சினையால் பத்திர பதிவு தாமதம் - பொதுமக்கள் அவதி

Published On 2022-09-02 04:36 GMT   |   Update On 2022-09-02 04:36 GMT
  • 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பத்திர பதிவு தொடர்பான பல்வேறு பணிகளுக்கு தினமும் வந்து செல்கின்றனர்.
  • தினமும் 100க்கும் அதிகமான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

பல்லடம் :

பல்லடம் மங்கலம் ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பத்திரம் பதிவு செய்வதற்காக பல்லடம், பொங்கலூர் மற்றும் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பத்திர பதிவு தொடர்பான பல்வேறு பணிகளுக்கு தினமும் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்தில் தினமும் 100க்கும் அதிகமான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இந்தநிலையில் நேற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில், முகூர்த்த நாள் என்பதால் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர். பத்திரப்பதிவுஅலுவலகத்தினுள், மற்றும் முன்புற வாயில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து கொண்டனர்.மேலும் அலுவலகத்திற்குள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இணையத்தள சர்வர் பிரச்சினையால் பத்திரப்பதிவு செய்வது தாமதமானது. இதனால் இரவு 8 மணிக்கு மேலும் பத்திரப்பதிவு நடந்தது. பத்திரப்பதிவுக்கு வந்திருந்த ஒருவர் கூறுகையில் :- பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த சில நாட்களாகவே மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் இணையதள சர்வர் பிரச்சினையால் பத்திரப்பதிவு தாமதமாகிறது.

இருந்தபோதிலும் பத்திரப்பதிவு அலுவலர்கள் பணி நேரம் முடிந்தும் கூட பொதுமக்களுக்காக பணியாற்றி பத்திரங்களை பதிவு செய்து தந்தனர். அரசு இணையதள சர்வர் பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் காலதாமதம் குறையும் என்றார்.  

Tags:    

Similar News