உள்ளூர் செய்திகள்

 பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்த சுத்திகரிப்பு தண்ணீர் வழங்கக்கூடிய எந்திரத்தை படத்தில் காணலாம்.

உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி

Published On 2023-04-29 11:05 GMT   |   Update On 2023-04-29 11:05 GMT
  • பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
  • பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

உடுமலை :

உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி வெளி மாவட்ட பஸ்களும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கிறது.

இதன் காரணமாக காலை முதல் இரவு வரையிலும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது .இந்த நிலையில் பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கான அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஏழை எளிய மக்கள் தாகத்தோடு திரும்பி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் குடிநீரின் பங்கு முக்கியமானதாகும்.ஆனால் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. பொது மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு தண்ணீர் வழங்கக்கூடிய எந்திரம் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து உள்ளது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் குடிநீர் வசதி இல்லாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். கோடை வெப்பம் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் உடலின் இயக்கத்திற்கு தண்ணீரின் பங்கு முக்கியமானதாகும்.அதை உணர்ந்தாவது நிர்வாகம் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவதற்கு முன் வர வேண்டும்.

அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தண்ணீர் வழங்கும் எந்திரம் பழுதடைந்தும் காட்சி பொருளாகவும் மாறி வருகிறது. எனவே உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் செயல்படாமல் உள்ள குடிநீர் வழங்கும் எந்திரங்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News