உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

காங்கயம் அருகே பழுதடைந்த சாலையால் பொதுமக்கள் கடும் அவதி

Published On 2023-11-19 05:36 GMT   |   Update On 2023-11-19 05:36 GMT
  • தற்போது இந்த சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
  • கர்ப்பிணி பெண்களை கூட்டிச் செல்ல முடியாத அளவிற்கு இந்த சாலை உள்ளது

 முத்தூர் : 

காங்கயம், சென்னிமலை சாலையில் ஆலாம்பாடி பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து காங்கயம் - பழையகோட்டை சாலையில் உள்ள மூலக்கடை வரை பல வருடங்களுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலை வழியாக பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் பயன்படுத்தி வருகின்றனர். தினசரி இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், சரக்கு வேன் மற்றும் கனரக லாரிகள், அரசு பஸ், தனியார் வாகனங்கள், பனியன் கம்பெனிகளுக்கு ஆட்களை ஏற்றி செல்லும் வேன்கள், தனியார் பள்ளி வேன்கள் என தினசரி எண்ணற்ற வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. மேலும் விவசாய பொருட்களையும் விவசாயிகள் எடுத்து சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது இந்த சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்க்கே பயன்படாத அளவிற்கு இந்த சாலை உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பல வருடங்களாக அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது : இருசக்கர வாகனத்தில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை கூட்டிச் செல்ல முடியாத அளவிற்கு இந்த சாலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் அவ்வப்போது குண்டும் குழியுமான சாலையால் கீழே விழுந்து செல்லும் சூழ்நிலையும் உள்ளது. இருசக்கர வாகனங்களும் விரைவில் பழுதாகும் சூழல் உள்ளது. இந்த நிலை பல வருடங்களாக உள்ளது. 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையை கடந்து செல்வதற்கு வெகு நேரம் ஆகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பல வருடங்களாக குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News