உள்ளூர் செய்திகள்

 உலகேஸ்வரர்கோவிலில் வர்ணம் பூசப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு தயாராக உள்ளதை படத்தில் காணலாம்.

பல்லடம் கரைப்புதூர் உலகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2022-09-04 05:01 GMT   |   Update On 2022-09-04 05:01 GMT
  • நுாற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது.
  • பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

பல்லடம் :

பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரத்தில் நுாற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் கும்பாபிஷேக பணிகளுக்காக பாலாலயபூஜை போடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றுவந்தன. பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்பொழுது திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இந்தநிலையில் வருகிற 8-ந்தேதி கும்பாபிஷேகவிழா நடக்கிறது. இதையொட்டி யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள்முடிவடைந்தது. தற்போது மின் விளக்கு அலங்காரப்பணிகள் நடைபெற்றுவருகிறது. இது குறித்து விழா குழுவினர் கூறுகையில், இந்த உலகேஸ்வரசாமி கோவில் பல நூற்றாண்டுகள் பழமையானது .சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு,அப்பர் அடிகளாரால் பாடல் பெற்ற ஸ்தலம். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வழிபட்ட கோவில்கள் என்பதற்கு அடையாளமாக கோவில்களில் பல்வேறு சின்னங்கள், சிலைகள் இன்றும் உள்ளது. இங்கு மூலவராக சிவபெருமான் லிங்க வடிவிலும், இவருக்கு வலப்புறம் உண்ணாமலை அம்மன் நின்ற கோலத்திலும் அருள் பாலிக்கின்றனர். மேலும் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் மற்றும் நவகிரகங்கள் சன்னதிகள் தனித்தனியே உள்ளன. இந்த கோவிலில் முன்பு தேர் இருந்ததாகவும், தேரோட்டம் சிறப்பாக நடந்ததாகவும், இங்கிருந்த தெப்பக்குளத்தை சுற்றி, 12 தீர்த்த கிணறுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கரிய காளியம்மன் கோவில் சிலையானது 8 கைகளுடன் வேல், திரிசூலம், போர் கவசம், பாம்புடன் கூடிய உடுக்கை, கத்தி, கிளி, தீச்சட்டி, ஆயுதம், மணி ஆகியவற்றை ஏந்தியபடி, மண்டை ஓடுகளை அணிகலன்களாகக் அணிந்து கொண்டு, ஆக்ரோஷமாக காட்சி அளிக்கிறது. இப்படிப் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த உலகேஸ்வரர் கோவிலில் வருகிற 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது யாகசாலை பந்தல் அமைக்கும் வேலைகள் முடிவுற்று மின் விளக்கு அலங்கார வேலைகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஆன்றோர்கள், சான்றோர்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கும்பாபிஷேக அழைப்பிதழ் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News