உள்ளூர் செய்திகள்

விழாவில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்ற போது எடுத்த படம். கே.எம்.நிட்வேர் நிர்வாக இயக்குனர் கே.எம்.சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் அருகில் உள்ளனர்.

கே.எம். நிட்வேர் நிறுவன கலாசார மையம் திறப்பு விழா: வடமாநில தொழிலாளர்களுக்காக கோவை-தன்பாத் ரெயிலை தினசரி இயக்க நடவடிக்கை - ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

Published On 2023-10-29 17:15 IST   |   Update On 2023-10-29 17:16:00 IST
  • கே.எம்.நிட்வேர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் விஷ்ணுபிரபு வரவேற்றார்.
  • கே.எம்.நிட்வேர்ஸ் இயக்குனர் மகேசுவரி சுப்பிரமணியம், எஸ்.ஆர்.வி.நிட்ஸ் நிர்வாக இயக்குனர் பாலுசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர்:

அவினாசி அருகே வேலூர் பகுதியில் கே.எம்.நிட்வேர் பனியன் நிறுவனத்தின் 12-வது தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிறுவன வளாகத்தில் கே.எம். நிட்வேர் நிர்வாக இயக்குனர் கே.எம்.சுப்பிரமணியனின் பெற்றோர் நினைவாக முத்துசாமி-முத்தம்மாள் கலாசார மையம் திறப்புவிழா நடைபெற்றது.

விழாவுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவரும், கே.எம். நிட்வேர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான கே.எம்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முத்துசாமி-முத்தம்மாள் கலாசார மையம் மற்றும் பெயர் பலகையை திறந்து வைத்தார். கே.எம்.நிட்வேர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் விஷ்ணுபிரபு வரவேற்றார்.

விழாவில், ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

பீகார், ஜார்கண்ட் போன்ற வட மாநில தொழிலாளர்களின் நண்மைக்காக, கோவை வழியாக தன்பாத்துக்கு வாரம் ஒருமுறை மட்டுமே ரெயில் செல்கிறது. இந்த ரெயிலை கோவையிலிருந்து தினசரி செல்லும் ரெயிலாக மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வட மாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக தமிழ்நாட்டில் பணியாற்றும் சூழ்நிலையில், அவர்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும், ஓடிவந்து உதவி செய்வேன். கே.எம்.நிட்வேர்ஸ் போன்ற பெரிய பனியன் நிறுவனங்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் தங்களது பனியன் நிறுவனங்களை ஆரம்பித்து, அங்குள்ள மக்களுக்கு அதிகளவு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து ஜார்கண்ட் மாநில பெண் தொழிலாளர்களின் பரதநாட்டியம், கலை, கலாசாரத்துடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் கே.எம்.நிட்வேர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குனர் கார்த்திக் பிரபு நன்றி கூறினார். இந்த விழாவில் ஜெய்ஸ்ரீ ராம் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எம்.தங்கராஜ், டாலர் அப்பேரல்ஸ் நிர்வாக இயக்குனர் ராமமூர்த்தி, மணி அப்பேரல்ஸ் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணி, பரணி நிட்டிங் மில்ஸ் நிர்வாக இயக்குனர் ஹரிசஷ்டிவேல், இயக்குனர் மதுமிதா, கே.எம்.நிட்வேர்ஸ் இயக்குனர் மகேசுவரி சுப்பிரமணியம், எஸ்.ஆர்.வி.நிட்ஸ் நிர்வாக இயக்குனர் பாலுசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News