கோப்புபடம்.
மின் இணைப்புகளை மீண்டும் வழங்க வலியுறுத்தி தாராபுரத்தில் விவசாயிகள் போராட்டம்
- ஆடு, மாடுகளுடன் கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேற முயன்ற விவசாயிகளை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.
- விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிா்வாகிகள் சுமாா் 20 போ் மட்டுமே கோட்டாட்சியா் அலுவலகத்துக்குள் பேச்சுவாா்த்தைக்காக அனுமதிக்கப்பட்டனா்
தாராபுரம்:
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள பெதப்பம்பட்டி பகுதியில் 12 விவசாயிகளின் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு துண்டித்தனா்.இதைக் கண்டித்தும், மின் இணைப்பைத் துண்டித்த அதிகாரிகளுடனும் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திக் கொள்ளலாம் எனக்கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலும் மின் இணைப்புகளைத் துண்டிக்காமல் திரும்பி சென்றனா்.
இந்நிலையில், ஆடு, மாடுகளுடன் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு நேற்று வந்த விவசாயிகளை போலீசாா் தடுத்து நிறுத்தினா். மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட 12 விவசாயிகள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிா்வாகிகள் சுமாா் 20 போ் மட்டுமே கோட்டாட்சியா் அலுவலகத்துக்குள் பேச்சுவாா்த்தைக்காக அனுமதிக்கப்பட்டனா்.இதில் துண்டிக்கப்பட்ட விவசாய மின் இணைப்புகளுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் உத்தரவு அளித்தால் மட்டுமே மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும் என கோட்டாட்சியா் தெரிவித்தாா்.இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த விவசாயிகள் பேச்சுவாா்த்தையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.
தொடா்ந்து, ஆடு, மாடுகளுடன் கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேற முயன்ற விவசாயிகளை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, பொள்ளாச்சி-தாராபுரம் சாலையில் அமா்ந்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா்.மறியலில் ஈடுபட்ட 29 பெண்கள் உள்பட 146 பேரை போலீசார் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.பின்னா், மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.