உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

தினமும் 8 மணிநேரம் தூங்கினால் மூளை புத்துணர்ச்சி அடையும் - மருத்துவ அதிகாரி அறிவுறுத்தல்

Published On 2022-07-24 05:14 GMT   |   Update On 2022-07-24 05:14 GMT
  • உலக மூளை தினம் ஆண்டுதோறும் ஜுலை 22ல் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • கருத்தரங்கு ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

திருப்பூர்:

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு- 2 சார்பில் உலக மூளை தின கருத்தரங்கு நடந்தது. கல்லூரி பேராசிரியை அமிர்தராணி தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார்.திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியின் பொது மருத்துவ துறைத்தலைவர் செண்பகாஸ்ரீ பேசியதாவது:-

உலக மூளை தினம் ஆண்டுதோறும் ஜுலை 22ல் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித உடலில் மிக முக்கியமான உறுப்பு மூளை. ஒன்றரை கிலோ எடையுடன், ஏறத்தாழ 10 ஆயிரம் கோடி நரம்புகளை கொண்டது.

நம் மூளையின் நரம்பு மண்டலத்தில் காயம் ஏற்பட்டால், சுற்றியுள்ள திசுக்கள் வளர்ந்து காயமடைந்த நரம்பு மண்டலத்தின் வேலையை செய்கிறது.ஆனால், புதிய நரம்புகள் உருவாகாது. அதனால்தான் மூளை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது.புகைப்பிடித்தல் , மது அருந்துதல், நீண்ட நேரம் மொபைல் போன் உபயோகித்தல், துரித உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற செயல்முறைகளினால் மூளை பெரிதும் பாதிப்படையும்.

மூளையை பாதுகாக்க முறையான பழக்கவழக்கங்களை பின்பற்றுதல், தினந்தோறும் குறைந்தது, 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதால் உடலின் ஆரோக்கியமும், மூளையின் ஆற்றலும் அதிகரிக்கும். தினமும் 8 மணிநேரம் உறங்கினால் மூளை புத்துணர்ச்சி அடையும். தவறாமல் அனைவரும் யோகா பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாணவ செயலர்கள் சுந்தரம், பூபதி ராஜா தலைமையில் ஏராளமான மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், பங்கேற்றனர். கருத்தரங்கு ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

Tags:    

Similar News